நிஜ ஹீரோக்கள் 'பேப்பர் பாய்'களுக்கு சல்யூட்

ஒவ்வொரு பொழுது விடியும்போதும், அன்றாட உலக நடப்புகளை உங்கள் வீட்டு வாசல் கதவுகளுக்கு அருகில் கொண்டு வைத்து வைக்கும், 'பேப்பர் பாய்'கள் தான், தற்போதைய நிஜ ஹீரோக்கள். உடலை உறைய வைக்கும் குளிர், கொட்டும் மழை என, எந்தவிதமான வானிலையிலும், கடமையை விட்டுக் கொடுக்காதவர்கள் இவர்கள். ஒவ்வொரு காலையிலும், நாளிதழ்கள் இல்லாமல் நீங்கள் பருகும் டீயும், காபியும் ருசிக்கவே ருசிக்காது. நாளிதழ்கள் இல்லாத விடியல், ஒருவித வெறுமையை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது; அந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

ஆனாலும், பேப்பர் பாய், நாளிதழ் ஏஜன்டுகளைப் பற்றி, ஒரு நிமிடம் கூட, நாம் யோசித்து பார்த்திருக்க மாட்டோம். கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக, நாம், வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும் இந்த அபாயமான நேரத்தில் கூட, போர் வீரர்களைப் போல், துணிச்சலாக கடமையாற்றுபவர்கள், பேப்பர் பாய்கள் தான். சமூக வலைதளங்கள் மூலம், உடனுக்குடன், நம் அலைபேசிகளில் தகவல்கள் கிடைக்கலாம். ஆனால், அது, நம்பகத் தன்மை உடைய தகவல்களா என்ற சந்தேகத்துக்கு விடையளிக்க யாரும் இல்லை.

ஆனால், தற்போதைய சூழலில் மட்டுமல்லாமல், எப்போதுமே நாளிதழ்கள், நம்பகத்தன்மை உள்ள தகவல்களை தரத் தவறியது இல்லை. இதில், பலரது உழைப்பு உள்ளது. இதில், பேப்பர் பாய், ஏஜன்டுகளின் உழைப்பு மிகவும் முக்கியம் வாய்ந்தது. நாளிதழ்கள் டெலிவரி செய்வோர் மட்டுமல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் சேவைகளை டெலிவரி செய்வோர் அனைவருமே, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே பார்க்கப்படுவது தான் துரதிர்ஷ்டம்.